
சென்னை பால்புதுமையினர் வாழ்வைக் கொண்டாடுதல்
பிற சமூகங்களைப் போலவே குயர் (Queer) சமூகங்களின் வளர்ச்சிக்கும் அது இயங்கும் நிலப்பரப்பிற்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட கலாச்சார சாதி வரலாறுகளை உடைய பிரதேசத்தின் கலாச்சார-பொருளாதார தலைநகரான சென்னை நகருக்கு என்று ஒரு குழப்பமான குயர் சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்தின் வரலாறு வழமையான பெரும்பான்மை ஊடகங்களில் பதிவு செய்யப்படவில்லை. நகர்ப்புற நிலப்பரப்புகளுக்கு வாய்வழி பாரம்பரியம் என ஒன்று இல்லை.
குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் துவங்கப்பட காரணம் சென்னையோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் பால்புதுமைச் சமூகத்தை சேர்ந்த நபர் அல்லது நபர்களின் கதைகளை அனுபவங்களை சேகரிப்பதுதான். இவை, ஒரு தனி நபராக சென்னையோடு உங்களுக்கு நேர்ந்த அனுபவமாக இருக்கலாம்; சென்னை உங்களை எப்படி அரவணைத்துக் கொண்டது அல்லது தனிமைப்படுத்தியது அல்லது வேறுபடுத்தியது என்பது பற்றியதாக இருக்கலாம். இதில் ‘உங்களை’ என்பதையும் ‘நகரம்’ என்பதையும் தாராளமாக நீங்கள் விவரித்து கொள்ளலாம். சுயமான பதிவுகளாகவும், புனைவாகவும், புனைவற்ற வடிவங்களிலும், புகைப்படமாகவும், பிற கலை வடிவங்களாகவும் எங்கள் புத்தகங்கள் வெளியாகும்.
வெளியீடு
விடுபட்டவை
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சித்தரிப்புகள் அதன் அரசியல் குறித்த ஒடுக்கப்பட்ட ஒரு குரலின் வெளிப்பாடாகவும், சாட்சியமாகவும் இப்பதிவுகள் திகழ்கின்றன. கூடவே, முகமூடிகள், ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் செயல்படும் சாதிப் படிநிலைகள், முந்திரி மணம் வீசும் காதல் பற்றிய எழுத்துகளையும் இப்புத்தகம் கொண்டிருக்கின்றது.
Queer Chennai Anthology
(தொகுப்பு பங்களிப்புக்கான அழைப்பு)
எங்கள் இரண்டாவது புத்தகம் சென்னை அல்லது சென்னையைச் சார்ந்த பால்புதுமையினர் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு தொகுப்பு. இந்த புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகும். வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் இருந்து வரும் மக்கள் சென்னையோடு தங்களை எவ்வாறு அடையாளப்படுத்தி கொள்கிறார்கள் என்பதோடு சென்னையோடு அவர்களுடைய வாழ்க்கை ஊடுபாவும் கதைகளை இந்த தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த புத்தகம் சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் காமிக் கீற்றுகள் வடிவத்தில் வெளியாகும்.
