top of page

சென்னை பால்புதுமையினர் வாழ்வைக் கொண்டாடுதல்

சென்னை மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பெருநகரம். இந்திய அளவில் இங்கு சுயாட்சி முதல் சுயநிர்ணயம் வரை அரசியல் கோட்பாடுகள் 70 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட ஒன்றாக இருக்கின்றன.சென்னையும் தமிழகமும் தேசியவாதத்திலிருந்து விலகியும் தொடர்ந்து அதோடு முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

 

பெருநகராகவும் தமிழகத்தின் தலைநகராகவும் இடம் பெயர்ந்து வந்த பலருக்கு அடைக்கலமாக மாறியிருக்கிறது சென்னை. இந்த திட்டத்தைத் தொடங்கும் நாங்களும் இந்நகருக்கு குடியேறிவர்கள்தான். எங்கள் வாழ்வின்  வெவ்வேறு கட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வந்தவர்கள் நாங்கள். நாங்கள் நாங்களாகவே இருப்பதற்கு சென்னை அனுமதித்தது. எங்களுடைய உடலையும் ஆசைகளையும் அரசியலையும், அடையாளங்களையும் இனம் காண எங்களுக்கு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்புகள் பல தியாகங்களின் பலிகளின் மேலேதான் செயல்படுகிறது என்பதையும் அறிவோம்.

 

மொழி, வர்க்கம், சாதி போன்ற பிரிவினைகளின் இரைச்சலுக்கு மத்தியில்  சில குரல்களை மூழ்கிப் போகவும் செய்திருக்கிறது சென்னை நகரம். நகரின் எல்லை விரிய விரிய சென்னையின் பூர்வ குடிகளின் குரல்கள் ஒரம் கட்டப்பட்டு, அமைதியாக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. தனிமையையும், சமூக உணர்வையும்  ஒரே அளவில் கொடுக்கவும், அழிக்கவும் நகரங்களால் முடிகிறது.

 

பிற சமூகங்களைப் போலவே குயர் (Queer - பால்புதுமையினர்) சமூகங்களின் வளர்ச்சிக்கும் அது இயங்கும் நிலப்பரப்பிற்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட கலாச்சார சாதி வரலாறுகளை உடைய பிரதேசத்தின்  கலாச்சார-பொருளாதார தலைநகரான சென்னை நகருக்கு என்று ஒரு குழப்பமான குயர் சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்தின் வரலாறு வழமையான பெரும்பான்மை ஊடகங்களில் பதிவு செய்யப்படவில்லை. நகர்ப்புற நிலப்பரப்புகளுக்கு வாய்வழி பாரம்பரியம் என ஒன்று இல்லை. இந்த வாய்வழி பாரம்பரியம் இல்லாததன் குறையை இணையம் கொஞ்சம் ஈடு செய்கிறது என்றாலும், பல குரல்களின் இருப்பினாலான பன்மைதன்மை இணையத்தில் சமமாக எடுபடுவதில்லை. எந்த கோட்பாடுகளாலும் கருத்தாக்கங்களாலும் ஒரு சமூகத்தை பற்றி அதன் உறுப்பினர்களுக்கும் வெளியாட்களுக்கும் முழுக்க எடுத்து சொல்ல முடியாது. இது ஒரு புதிரான வேலை. ஆனால் தற்போது இருப்பவைகளையும் இனி வரப்போவனவற்றையும் ஒன்றாய் கோர்க்க எடுக்கப்படும் சிறு முயற்சி.

 

பால்புதுமையினரை (Queer) தொடர்ந்து ஒடுக்கி, அவர்களின் இருத்தலையே பொதுச்சமூகம் மறுக்கும் நிலையில்  - எதிர்கால பால்புதுமையினர் சமூகம் எங்களை போலவே கலை இலக்கியங்களில் குறைவான ஒப்புமைகளையும் வளங்களையும் கொண்டேதான் தங்கள் வாழ்க்கைகளைத் தொடங்குவார்களா என்ற கேள்வி எங்கள் முன் இருக்கிறது. பால்புதுமையினர் சமூகத்தின் இருத்தல், முறையே ஆவணப்படுத்தப்படாததால் எங்கள் கதைகளை நாங்களே ஆவணப்படுத்த கட்டாயப்பட்டிருக்கிறோம்.

 

இப்படியான முயற்சிக்கு பின்னே ஒற்றைப்படையான நோக்கம் மட்டுமே இருக்க முடியாது. இதற்கென நாங்கள் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர் கூட்டத்தையும் ஊகிக்கவில்லை. எங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளின்படி இதை புரிந்து கொண்டு  முன்னேறுகிறோம், பயணிக்கிறோம். இருளுக்கு மத்தியில் சிறு வெளிச்ச கீற்றாகவும், ஒரு துண்டு அழகியலாகவும்  இந்த துவக்கம் இருக்கும்.

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் துவங்கப்பட காரணம் சென்னையோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் பால்புதுமைச் சமூகத்தை சேர்ந்த நபர் அல்லது நபர்களின் கதைகளை அனுபவங்களை சேகரிப்பதுதான். இவை, ஒரு தனி நபராக சென்னையோடு உங்களுக்கு நேர்ந்த அனுபவமாக இருக்கலாம்; சென்னை உங்களை எப்படி அரவணைத்துக் கொண்டது அல்லது  தனிமைப்படுத்தியது அல்லது வேறுபடுத்தியது  என்பது பற்றியதாக இருக்கலாம். இதில் ‘உங்களை’ என்பதையும் ‘நகரம்’ என்பதையும் தாராளமாக நீங்கள் விவரித்து கொள்ளலாம். சுயமான பதிவுகளாகவும், புனைவாகவும், புனைவற்ற வடிவங்களாகவும், புகைப்படமாகவும், பிற  கலை வடிவங்களாகவும் எங்கள் புத்தகங்கள் வெளியாகும்.

                                                                                                         ~*~

எங்கள் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் புரிந்துணர்வு குறித்து தெரிந்து கொள்ள எங்கள் அடிப்படைக் கூறுகள் பக்கத்தில் உள்ள வார்த்தைப் பயன்பாட்டை வாசிக்கவும்.

QCC Header
bottom of page