எங்கள் அடிப்படைக் கூறுகள்

தனிநபர் உரிமை, மரியாதை மற்றும் ஒப்புதல்


பால்புதுமையினராக இந்த உலகம் எத்தனை பாதுகாப்பற்றது என்பது எங்களுக்கு அடிக்கடி நினைவூட்டப்படுகிறது; அதை நாங்கள் புரிந்து கொள்ளவும் செய்கிறோம். பால்புதுமையினர் ஆகிய நம்முடைய புகைப்படங்கள் அனுமதியில்லாமல் ஊடகங்களில் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் பல நடந்தேறிவிட்டன. தொலைக்காட்சி சேனல்கள் எங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து தங்களுடைய பரபரப்பான – வெறுப்பைத் தூண்டும் - செய்தி தொகுப்பில் பயன்படுத்திக் கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இணையத்தில் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் எங்களுக்கு தெரியாமல் பகிரப்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அறிகிறோம், அதேபோல் ஒப்புதலும் நிலையானதல்ல. எனவே, இதை கருத்தில் கொண்டு, எங்கள் தொடர்பு மற்றும் செய்திமடல்களில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் முன்னெச்சரிக்கையாக மிக கவனமாக ஆராயப்பட்ட பின்னரே பகிரப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். https://www.queerchennaichronicles.com இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எங்களுடைய அனுமதியில்லாமல் வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.
பிரதிநிதித்துவம் மற்றும் கலாச்சார திருட்டு


சென்னையை சேர்ந்த பால்புதுமையினர் சமூகத்தின் பிரதிநிதியாகவோ, பிற தனி நபர் பிரதிநிதியாகவோ நாங்கள் இந்த முயற்சியில் இயங்கவில்லை. வேறுபாடுகள் நிறைந்த குயர் சமூகத்தில் நாங்கள் ஒரு சிறு பகுதி; நாங்கள் எதுவாக இல்லாமல் இருக்கிறோமோ அந்த குரல்களாக ஒலிக்கக் கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்கிறோம். இந்த தளம் மக்கள் தங்கள் கதைகளை தங்கள் குரல்களில் சொல்வதற்காகவே அமைக்கப்பட்டது. ~~~
வார்த்தைப் பயன்பாடு


தமிழில் ' குயர்' (Queer) எனும் வார்த்தைக்கு ஈடாக ‘பால்புதுமையினர்’ எனும் பதத்தை பயன்படுத்துகிறோம். Queer Chennai Chronicles-ஐ குறிப்பிடும் பொழுது, தமிழில் குயர் மற்றும் க்ரோனிக்கிள்ஸ் எனும் ஆங்கில வார்த்தைகளை தக்கவைத்து கொள்கிறோம். மொழிநடை மற்றும் சூழுலை பொறுத்து ‘பால்புதுமையினர்’ மற்றும் 'குயர்' ஆகிய வார்த்தைகள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும். எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும், பிறப்பில் குறிக்கப்பட்ட பாலினத்தில் (cisgender) அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் குறிப்பிட, பொதுவாக குயர் அல்லது பால்புதுமையினர் எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம். தனிப்பட்ட நபர்களை குறித்து எழுதும் போது அவர்களின் பதத் தேர்வு பயன்படுத்தப்படும்.

QCC Header