விடுபட்டவை
“யட்சிகளுக்கு மட்டுமே தெரியும், குப்பிகளில் அடைபடுவதன் வலி. யட்சிகள் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள், ஒருமுறை குப்பிகளுக்குள் நுழைக்கப்பட்டால் வெளியேற நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பதை”
- புத்தகத்திலிருந்து.
ஒரு சிறிய காதல் கதைக்கு நூற்றாண்டுகளின் வரலாற்று முக்கியத்துவங்கள் என்ன இருந்துவிடமுடியும்? சமூக ஊடக அரட்டைகளிலும், சின்ன பெரியத் திரை அலம்பல்களிலும் அடிபடும் பெயர்கள் சொற்களின் நிஜ வாழ்க்கை பாதிப்புகள் என்ன? பாலின பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் சமூகங்கள் வெறுமனே ஒற்றைப்படையானவையா என பல்வேறு கடினமான கேள்விகளை எதிர்கொண்டு கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இயற்கையானவை என்று எவையெவை சொல்லப்படுகின்றன? அவை இயற்கை என்று தீர்மானிப்பவர்கள் யார்? இந்த இயற்கை - இயற்கைக்கு எதிரானது என்ற கருத்தாக்கத்தை விடுபட்டவை கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பிட்ட கருத்தாக்கங்களால் வரையறுக்கப்பட்ட தூய்மை நம் காலத்தின் உண்மையாக இல்லாவிட்டாலும் அனைவரும் பின்பற்றவேண்டுமென எதிர்பார்க்கபடும் திணிக்கப்படும் ஒன்றாகியிருக்கின்றது. நமது சிந்தனைமுறைகளும், சமூக அமைப்புகளும் இவற்றையே இயற்கை இயல்பு என்று ஏற்க நம்மைப் பழக்கியிருக்கின்றன. இந்த இயல்பு பிறப்பால் வரையறுக்கப்பட்ட ஆண் - பெண் என்ற பாலினங்கள், ஆண் - பெண் பாலீர்ப்பு இவற்றை மற்றுமே இயற்கை, மற்றவை வெறுக்கத்தக்கவை, அவனா/ளா நீ, ஓரினச் சேர்க்கை என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. விடுபட்டவையில் இந்த ஒற்றைத்தன்மையைத் தாண்டியிருக்கும் வாழ்க்கைகளும், அவை எதிர்கொள்ளும் சமூகமும் பதிவாகியிருக்கின்றன. இப்புத்தகத்தில் வெளிப்படும் ஆசைகள், அனுபவங்கள், தேவைகள், எண்ணங்கள் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மற்றவர்களுக்கு விளக்குவதாகவோ அவற்றிற்கு காரணம் தெளிவிப்பதாகவோ இல்லை. இவை நாம் வாழும் காலம் சமூகத்தின் பதிவுகள், அதன் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகள். ஒரு ஆண் ஆணை, பெண் பெண்ணை நேசிப்பது ஏன், ஆண் பெண் மற்ற பாலினங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் விளக்கப்புத்தகமாக இது முயலவில்லை.
காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சித்தரிப்புகள் அதன் அரசியல் குறித்த ஒடுக்கப்பட்ட ஒரு குரலின் வெளிப்பாடாகவும், சாட்சியமாகவும் இப்பதிவுகள் திகழ்கின்றன. வழமையான கதையாடல் முறைகள், பாலின பாலியல் தேர்வுகள் குறித்த பெரும்பான்மைப் பார்வைகள் ஆகிய்வற்றிற்கு மாற்றுகளை முன்வைக்கும் சமயத்திலேயே, முகமூடிகள், ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் செயல்படும் சாதிப் படிநிலைகள், முந்திரி மணம் வீசும் காதல் பற்றிய எழுத்துகளையும் இப்புத்தகம் கொண்டிருக்கின்றது.
அதன் வெளிப்படையான பாலீர்ப்புத் தேர்வுகளாலும், பல வடிவங்களில் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் தொகுப்பு என்பதிலும் இப்புத்தகம் தமிழில் ஒரு முதல் முயற்சியே என்பதைப் பதிப்பாளர்களாக மகிழ்ச்சியும் வேதனையும் கலந்தே சொல்லவேண்டியிருக்கின்றது. குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் என்ற இந்த பதிப்பு முயற்சியைத் தொடங்கியதற்கான காரணமும் இது ஒரு முதல் முயற்சியாக இதுவரை செய்யப்படாமல் இருப்பதே என்று சொல்லலாம். இந்த முதல் முயற்சியில் இணைந்து பதிப்பிக்க முன்வந்த கறுப்புப் பிரதிகளுக்கும், இம்முயற்சியின் பல நிலைகளின் பல உதவிகளை செய்த நண்பர்களுக்கும் எங்களது நன்றிகள்.
எங்களைப் பற்றியும், திட்டமிடப்பட்டிருக்கும் எங்களது அடுத்தடுத்த பதிப்பு முயற்சிகளைப் பற்றியும் queerchennaichronicles.com என்ற எங்களது இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நன்றி,
குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்.
ஜனவரி, 2018.
~~~
விடுபட்டவை © கிரீஷ் | முதல் பதிப்பு: ஜனவரி 2018 | வெளியீடு: கருப்புப் பிரதிகள் & குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்
முகப்பு பின்னணி ஓவியம்: Freepik | அட்டை வடிவமைப்பு: செந்தில் | புத்தகவடிவமைப்பு: குரூஸ்
Co-Published by