top of page

சென்னையில் பால்புதுமையினர் - குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் தொகுப்பு

தொகுப்பு பங்களிப்புக்கான அழைப்பு

 

எங்களுடைய அடுத்த புத்தகம் பால்புதுமையினர் பார்வைகளில் சென்னை நகரம் குறித்த சென்னையைச் சேர்ந்த குயர் மக்களின் கலைப் படைப்புகளுடைய தொகுப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியாகும்.

"மற்ற சமூகக்குழுக்களைப் போலவே குயர் சமூகங்களும் தாங்கள் சேர்ந்திருக்கும் நிலப்பரப்போடு தொடர்புற்றவையாகவே வளர்கின்றன. ஒரு நகர்ப்புற நிலப்பரப்பாகவும், தமிழ்நாட்டின் கலாச்சார பொருளாதார தலைநகராகவும் சென்னைக்கென கலாச்சாரத்தின் சாதியத்தின் வரலாறுகள் இருக்கின்றன,  அதே அளவு பன்முகத்தன்மையான குயர் சமூகமும் இங்குள்ளது. இச்சமூகத்தின் கதைகள் வழமையான ஊடகங்களில் போதுமானளவு பதிவுசெய்யப்படவில்லை. இத்தொகுப்பு அதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறோம்."

 

ஒரு குயர் நபராக சென்னை உங்களுக்கு என்னவாக இருக்கின்றது, இருந்தது? இதில் இடம்பெறும் கதையாடல்கள் ஒரு தனிநபராக இந்நகரத்தோடான அனுபவங்கள், இந்நகரில் நிகழ்ந்த தனிப்பட்ட அனுபவங்கள், சென்னை ஒரு குயர் நபராக உங்களை அரவணைத்துக்கொண்டதும் வெளித்தள்ளியதும், சென்னையின் குயர் சமூகங்களுடனான உங்கள் அனுபவம் இவற்றைப் பற்றியதாக இருக்கலாம்.  சென்னையில் வாழ்ந்த, வாழும், சென்னையோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் பால்புதுமையினரை எங்களது அடுத்த இருமொழித் தொகுப்புக்கு எழுதுவதற்காக அழைக்கிறோம். தங்களது படைப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுபவக் கட்டுரைகள், பொதுவான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், புகைப்படத் தொகுப்புகள் அல்லது காமிக்குகளாக இருக்கலாம். எழுத்து வடிவங்கள் 3000-இலிருந்து 6000வரை வார்த்தைகள் வரையும், கவிதைகள், புகைப்படத் தொகுப்புகள், காமிக்குகள் 6” * 9” புத்தகத்தில் 10 பக்கங்கள் வரையும் இருக்கலாம்.

 

வேறுபட்ட ஒடுக்கப்பட்ட அடையாளங்களிடையே ஊடுபாவும், வழமையான வடிவங்கள் மதிப்பீடுகளைத் தாண்டிய, எவ்வித ஆதிக்க மனோபாவம் மற்றும் சாதிய ஒடுக்குமுறையை ஆதரித்துப் பேசாத படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

உங்களுடைய படைப்பின் முதல் வடிவ அல்லது அதுபற்றிய குறிப்பை 30 மார்ச் 2018ற்குள் அனுப்பிவைக்கவும்.

காமிக் மற்றும் புகைப்படங்களுக்கு, ஒரு சிறிய விஷயச்சுருக்கமும், உங்களுடைய கலை பாணி குறித்த குறிப்பும் அனுப்பவும். உங்களுடைய பழைய படைப்புகளையும் நீங்கள் விரும்பினால் இணைக்கலாம்.

சமர்ப்பித்தல் நெறிமுறைகள்:

எழுத்துப் படைப்புகள் யூனிகோட் எழுத்துருக்களிலும் .doc, .odt, .rtf என எளிதில் பயன்படுத்தக்கூடிய கோப்புமாதிரிகளிலும் இருக்கட்டும். புகைப்படங்கள் அல்லது காமிக்குகள் ஒரே கோப்பில் தேவையான குறிப்புகளோடு பிடிஎஃப் ஆக இருக்கட்டும்.
 

  • படைப்பு கிடைத்ததும் அதுகுறித்து தெரிவிப்போம். தொடர்ந்து உங்கள் படைப்புப் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது குறித்து உங்களுக்குத் தெரிவித்துத் தொடர்புகொள்ளப்படும்.

  • இதுவரை எங்கும் பிரசுரமாக படைப்புகளை அனுப்பவும். வேறெங்கும் உங்கள் படைப்புகளை அதே நேரத்தில் அனுப்பினால், அதுகுறித்தும், வேறிடத்தில் முதலில் பிரசுரமாகும் பட்சத்தில் அதுகுறித்தும் எங்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

  • இணைப்பிலிருக்கும் படிவத்தில் உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம். ஒரே படிவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளையும் இணைக்கலாம்.

  • தங்கள் விருப்பப் பெயருடன் கோப்புப் பெயர் தொடங்கட்டும். உதாரணம் “மீனா_கவிதைகள்”.

  • படிவத்தில் தாங்கள் பூர்த்திசெய்யும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். படைப்பு பிரசுரத்திற்கு தேர்வாகும் பட்சத்தில் எங்கள் பதிப்பு நடைமுறைகள், படைப்பின் முழுமையான வடிவத்தை அனுப்பவேண்டிய கடைசி நாள், பதிப்புக்கு பயன்படுத்தப்படுவதற்கான சுயவிவரங்கள் குறித்து உங்களிடம் பேசி பின்னரே பயன்படுத்தப்படும்.

  • இத்தொகுப்பில் வேறுபட்ட பலகுரல்களைப் பதிவுசெய்வதே எங்கள் நோக்கம். கேட்கப்பட்டுள்ள விவரங்களும் அதைநோக்கியே.

~*~

படைப்பு சமர்பிப்பு படிவம் (முடிவடைந்தது)
QCC Header
bottom of page